18 January, 2010

துத்தா

பார்க்குமனைத்துக்கும் பார்த்தமாத்திரத்திலேயே
பெயர்சூட்டிவிடும் ஞானம் வாய்த்திருக்கிறது
ஒன்னரை வயது கபிலனுக்கு

அதற்கு முன்பிருந்த பெயர்குறித்தோ
பின்பு வரப்போகும் பெயர் பற்றியோ
அவன் கிஞ்சித்தும் கவலையுறுவதில்லை

களிகூர்ந்து அவன் சூட்டும் நாமகரணம்
ஒருபோதும் மொழியின் கூண்டுக்குள்
நிலைகொள்ளாது மேலாக
அர்த்தத்தைச் சிங்காரிக்கும்

கல்லணையை அவனுக்கு
அறிமுகப்படுத்திய கணத்தின் முடிவில்
தேங்கித் தளும்பிய புனலை
இத்தியென அள்ளியாடினான்

வீடு மீண்டதும் கல்லணையை
பக்கெட்டில் ஊற்றி அவன்
இத்தியாடுகையில் எதிர்பட்ட
எலியின் பொருட்டு
புவ்வாவென்று அலறினான்

கேட்கப்போன அப்பாவாகிய அப்பா
துத்தாவானார்
துத்தா அப்பவானால்
அப்பா என்னவாகும்

நன்றி: கல்கி (28.02.10)

No comments: