05 April, 2011

ஆலகாலம்

சட்டையை உறித்து நழுவுகிற ஸர்ப்பமென நகரும்
நதியின் வலது கரையில் முளைத்திருக்கும் மரம்
ஆலகாலக் கனிகளைத் தரக் காத்திருக்கிறது

கிளைகளில் தொங்குகிற விரியன் குட்டிகள்
காய்த்துத் திரண்ட மரத்தின் மேனியெங்கிலும்
தம் பிளவான நாவுகளால் நீவிவிடப்
புல்லரித்த அதன் நிழலும் துளிர்க்கிறது

பச்சைய காலத்து இலைகளைக் கொய்து
தலைக்கு வைத்துறங்கும் அவளின் கனவுகளில்
நீலம் பாரித்துச் சலசலக்கிறது அந்நதி

மரத்தின் வேர்கள் நீளும் தூரத்துக்கு இணக்கமாய்
புதைத்துவிடுங்கள் நான் உயிர்த்துவிடுவேன்
என்று சபலப்படுகிறான் அவன்

அவன், அவள், விரியன், மரம், நிழல்
யாவற்றையும் இழுத்துக்கொண்டு சுழிக்கையில்
விரியன் மரமாகி அவள் விரியனாகி
அவன் நிழலாகி மரம் அவளாகி
நிழல் நதியாக

காலத்தை அறுத்துக்கொண்டு நுரைக்கிறது
ஆலகாலம்

நன்றி: 361 டிகிரி

3 comments:

பா.ராஜாராம் said...

அருமையாய் இருக்கிறது சார்!

Thenammai Lakshmanan said...

அட இப்படி விரியன் குட்டியாய் நானே நீளுகிற கவிதை படித்ததில்லை..

கண்டத்துள் உறைகிற ஆலகாலமாய் நிற்கிறது..

உயிரோடை said...

கவிதை நன்று