01 November, 2011

எங்களூர் பிள்ளையார்

எங்களூரில் கழுதைகள் இரையுண்ணும் பொட்டல் பிராந்தியத்தில்
குவித்து வைத்த ஏதோ ஒன்றென அவரைப் பார்க்கையில்
தெரிவார் பிள்ளையாரென
விரிந்த பிருஷ்டம் வழிந்தொழுகும் தொப்பை
மினுங்கிடும் அகலின் கீற்று உறுதிப்படுத்தும்
அவரை அவர்தானென
வருடத்துக்கொருதரம் கொழுக்கட்டை படையலோடு கூடும் குலப்பெண்களிலிருந்து கண்களின் ஒளியையும்
கொங்கைகளின் கூச்சத்தையும் பூசிக்கொண்டதுபோலிருக்கும் அவர்
அப்போது ஏற்றிருக்கும் அரிதாரம்
பிற்பாடு, திருவிழாவில் தொலைந்த குழைந்தையின் பீதியோடு
கறுத்துப்போன முகத்தைத் தூக்கி நிறுவுவார்
தனிமையின் இருக்கையில் சீந்துவாரற்றும்
மீண்டும் பல்லக்கில் ஏறும் கனவோடும்
பழிச்சாலும் நிந்திச்சாலும் கண்ணை அவிச்சுடும்டா சாமி-
சன்னதமாடும் அப்பத்தாவும் அறியும்
இச் ஷனம்வரைக்கும் ஒன்னுமேயாகாத
ஒத்த காலைத் தூக்கி புள்ளையார் மீது
ஒண்ணுக்குப் பெய்யும் கெடா நாயை

நன்றி : அகநாழிகை (மார்ச் 2010)

3 comments:

செம்மலர் செல்வன் said...

அருமை.

Unknown said...

//கறுத்துப்போன முகத்தைத் தூக்கி நிறுவுவார்
தனிமையின் இருக்கையில் சீந்துவாரற்றும்//

நல்ல அவதானிப்புதான். முதல் வாசிப்பிலேயே மனதில் ஒட்டிகொண்டது கவிதை. அன்பு வாழ்த்துகள் கதிர்!

ஹ ர ணி said...

அன்புள்ள கதிர்பாரதி

வணக்கம். முதன்முறையாக வந்தேன். என்னுடைய அஞ்சலில் உங்கள் முகவரி கண்டு வந்தேன். ஒவ்வொரு கிராமத்திற்கும் சரி.. ஆளரவமற்ற இடங்களுக்கும்போனால பிள்ளையாரைத்தான் தேடுவேன். பிள்ளையார் எனக்குப் பிடித்தமான கடவுள். மனிதர்களே மன்னிக்கும்போது கெடா நாயை மன்னிக்கமுடியாதா?