23 June, 2012

மதுக்கூடங்களோடு புழங்குதல்



சமூகநலக் கூடங்களுக்குள் நுழைதல் போல
அத்துனை இலகுவானதல்ல மதுக்கூடத்துள் நுழைவது.
கதவைத் திறந்துகொண்டு நுழையும்போது
அங்கு நுரைபூத்துத் ததும்பிக்கொண்டிருக்கும் சொற்களின் மீது
இடித்துக்கொள்ளாமல் நுழைதல் வேண்டும்.
உங்களுக்குரிய இருக்கையை அணுகும்போது கரிசனம் முக்கியம்.
உங்களுக்கு முன்பும் பின்பும் அமர்ந்ததும் அமரப்போவதும்
அதிஉன்னத அனுபவமல்லவே.
மதுசிப்பந்திகளிடம் புன்னகையைக் கொடுத்துவிட்டு
மதுவைப் பெற்றுக்கொள்ளுதலே நல்லப் பழக்கம்.
ஐஸ்கட்டிகளோடு உங்களையும் முக்கிவிடுகையில்
உயிர்த்திரவமென பூரித்துக் கிளம்பும் மதுவை முத்தமிடுங்கள்.
ஒவ்வோர் இருக்கையிலும் வெவ்வேறுலகம் சுழன்றுகொண்டிருக்கும்
எவருலகத்தோடும் ஒட்டாது உரசாது
நீங்களும் சுழலவிடுங்கள் உங்கள் உலகை.
போதையின் பெருங்காதலோடு உலகங்களை அவதானிப்பதுகூட
அடடா எவ்வளவு ஆனந்தம்; எவ்வளவு பேரானந்தம்.
இரண்டாவது, மூன்றாவது, நான்காவது... சுற்றுகளுக்குப் பிறகு
வாழ்க்கை உங்களுக்குக் குமட்டலெடுக்கத் தொடங்கும்.
அப்போது மனதுக்குள் மதுக்கூடத்தைத் தெண்டனிட்டுவிட்டு
வெளியேறிவிடுதலே புத்திசாலித்தனம்.
இல்லையேல் இன்னும் ஒரேயோரு மிடறுக்குப் பிறகு
ஈசானமூலையில் முகம் இருள அமர்ந்திருப்பவனின்
தனிபெரும் விசும்பலில் மதுக்கூடமே தளும்பத் தொடங்கிவிடும்.
 

5 comments:

'பரிவை' சே.குமார் said...

//இரண்டாவது, மூன்றாவது, நான்காவது... சுற்றுகளுக்குப் பிறகு
வாழ்க்கை உங்களுக்குக் குமட்டலெடுக்கத் தொடங்கும்.
அப்போது மனதுக்குள் மதுக்கூடத்தைத் தெண்டனிட்டுவிட்டு
வெளியேறிவிடுதலே புத்திசாலித்தனம்.
இல்லையேல் இன்னும் ஒரேயோரு மிடறுக்குப் பிறகு
ஈசானமூலையில் முகம் இருள அமர்ந்திருப்பவனின்
தனிபெரும் விசும்பலில் மதுக்கூடமே தளும்பத் தொடங்கிவிடும்//

ஆஹா... அருமை...

ஹ ர ணி said...

அன்புள்ள...

எத்தனை எளிமையான அதேசமயம் ஆழமான கவிதையிது. புரிதலில் சிக்கல் இல்லாத கவிதை. அழகாக ஒரு மதுக்கூடத்தின் அனுபவத்தை அழகாகத் தொங்கும் திராட்சைக் கொத்தைப்போல விவரித்துப்போகிறது.

இக்கவிதையில் சொற்கள் நுரைத்து ஓடும் நதியைப்போலஅழகாக நம்மை மிதக்கவிட்டு அழைத்துப்போகிறது. மது விரும்பாதவர்கள்கூட இதனை அனுபவிக்கப் போதை தரும் சுகமான கவிதை.

ஈசான மூலையில் முகம் இருள அமர்ந்திருப்பவனின் தனிப்பெரும் விசும்பல்...
எத்தனை தேர்ந்த வார்த்தைகள்.. இது வெளிப்படுத்தும் வாழ்வியலை எண்ணிப் பாருங்கள். ஒட்டுமொத்தக் கவிதையும் ஒரு தனிமனித வர்ழ்வியலைப் படம்பிடித்துவிடுகிறது.

இது மதுர கவிதை.

நாம் வாழ்க்கையை ஒரு மதுக்கடையினுள் நுழைவதுபோல நுழைந்து அனுபவிக்கலாம். ஆனாலும் அதற்கொரு எல்லை இருக்கிறது. இந்த எல்லை வாழ்கிற முறை. அது அளவு மீறும்போது குமட்டலாகிறது.

அழகாகச் சொல்கிறீர்கள் கதிர்பாரதி..
அப்போது மனதுக்குள் மதுக்கூடத்தைத் தெண்டனிட்டுவிட்ட வெளியேறிவிடுதலே புத்திசாலித்தனம்..
வாழ்விலும் அப்படித்தான்.. ஒரு நிலையில் நாம் மனநிறைவு கொண்டுவிட்டால் வாழ்வதில் அர்த்தமும் மகிழ்ச்சியும் நிறைந்து நிற்கும்.

மனதை நெருக்கிப் பிடிக்கும் கவிதை.

அனுபவிக்கிறேன்.

நிலாமகள் said...

ம‌துக்கூட‌ங்க‌ளோடு புழ‌ங்க‌ ந‌ல்ல‌தொரு வ‌ழிகாட்டிதான்! சொற்க‌ளின் சுக‌ம் ச‌ர‌க்கின்றி போதையூட்டுகிற‌து.

கதிர்பாரதி said...

ஹரணி ஸார் உங்கள் வார்த்தகைள் என்னை உற்சாகமாக்குகின்றன. தஞ்சாவூர் வரும்போது உங்களைச் சந்திக்கிறேன்.
அன்புடன்
கதிர்பாரதி....

கதிர்பாரதி said...

சே.குமார், நிலாமகள்.... என் கவிதைகள் நீளும் பக்கமெல்லாம் நீங்கள் இருக்கிறீர்கள் உங்களுக்கும் அன்பும் நன்றியும்

கதிர்பாரதி