26 July, 2012

ஒரு பரோட்டா மாஸ்டர் உதயமாகிறான்

ஒரு மாநகரத்தின் பரோட்டா கடையில்
ஒரு முட்டை பரோட்டாவும்
ஒரு சாதா பரோட்டாவும்
ஒரு பரோட்டா மாஸ்டரை உருவாக்குவது குறித்து
தீவிர விவாதத்தில் இருக்கின்றன.
பரோட்டா அறிவில்லாத கூமுட்டையனாக இருந்தால்
நிரம்ப நல்லதென்கிறது முட்டை பரோட்டா.
பத்தாம் வகுப்பு கணக்குப் பாடத்தில் தோல்வி
கூடுதல் தகுதி என்கிறது சாதா பரோட்டா.
பக்கத்து வீட்டு சுமார் அழகிக்கு லவ் லெட்டர் எழுதி
அவள் அண்ணனிடம் குத்துப்பட்டிருப்பவனுக்கு முன்னுரிமை.
அவன் கனவில் பரோட்டா வட்டவட்ட பௌர்ணமியாக
வலம் வந்திருக்க வேண்டும்.
வாழ்க்கை ஒரு பரோட்டாவைப் போல அவனைப்
பிய்த்துப்போட்டு உண்டிருக்க வேண்டும்.
விவாதத்தின் முத்தாய்ப்பாக
அவன் ஊரைவிட்டு ஓடிவந்திருக்க வேண்டும் என்கிறது
முட்டைப் பரோட்டா.
பதத்துக்கு வராமல் அவன் முரண்டுபிடித்தால்...
சாதா பரோட்டாவுக்குச் சந்தேகம்.
அப்படியே இரண்டு கைகளால் அவனை அள்ளிக்குவிச்சு
தலையில் தண்ணீர்த் தெளித்து,
சூடாக எண்ணெய்விட்டுப் பிசைந்து
முகத்தில் நான்கு குத்துகள் குத்தவேண்டும்.
அப்போது கைகளில் அடங்காமல் திணறுவான்.
அந்நேரத்தில் உருண்டைப் பிடித்துவிட வேண்டும்.
உருட்டுக்கட்டையால் முகத்தில் தேய்த்து
கிழியக்கிழிய நாலாபக்கமும் வீசி,
சுருட்டிப் போட்டு சூடான கல்லில் இரண்டு பிரட்டுப் பிரட்டி
இரும்புக் கம்பி கொடுத்து நெம்பினால்
தம்பி தானாகப் பதத்துக்கு வந்துவிடுவான்.
திட்டத்தைச் சொன்னது முட்டைப் பரோட்டா.
’’
ஆகா, அற்புதம்’’ என்ற சாதாபரோட்டா
உணர்ச்சி மிகுதியில் குதிக்க
கடையில் சால்னா தளும்பிச் சிந்துகிறது

3 comments:

ராமலக்ஷ்மி said...

தம்மைப் புரட்டிப் போடும் மனிதனை வாழ்க்கை எப்படியெல்லாம் புரட்டிப் போடுகிறது என அழகாய் சொல்லி விட்டன பரோட்டாக்கள்:)!

நிலாமகள் said...

ப‌ரோட்டா க‌டையில் கூட‌ ஒளிந்திருக்கிற‌து த‌த்துவ‌ம்!

vasan said...

ப‌சி அட‌ங்கிய‌தா? ருசியாய் இருந்ததா?
நேர‌ம் க‌ட‌ந்து வ‌ந்த‌வ‌ர்க‌ளுக்கான க‌டைசி மெனு.
அட்ச‌பாத்திர‌த்தின் அடியில் கிட‌ப்ப‌து,
புரிகிற‌து அடித்த‌ட்டு ம‌க்க‌ளைப் போல்
அடிப‌ட்டே வ‌ள‌ர்கிற‌து பரோட்டாவும்.